மானாமதுரை பகுதியில் தரமற்ற குடிநீர் குழாயால் தண்ணீர் வீணாக வெளியேறி வரும் அவலம்

மானாமதுரை பகுதியில் போடப்பட்ட தரமில்லாத குடிநீர் குழாய் உடைந்து குடி தண்ணீர் வீணாகி வெளியேறியது. இதனை சரிசெய்வதற்காக புதிதாக போடப்பட்ட சாலையை பழுதுநீக்கும் பணி நடைபெற்றது.
மானாமதுரை பகுதியில் தரமற்ற குடிநீர் குழாயால் தண்ணீர் வீணாக வெளியேறி வரும் அவலம்
Published on

மானாமதுரை,

மானாமதுரை பேரூராட்சிக்கு உட்பட்ட மருதுபதி நகர், ஆனந்தவல்லி அம்மன் கோவில் ரத வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1 கோடிக்கும் மேல் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் அருகே சாலைப்பணிக்காக வந்த ஒரு லாரி குடிநீர் குழாய் இணைப்பு பகுதி அருகே பள்ளத்தில் இறங்கியது. இதில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறியது. இதனைத் தொடர்ந்து குழி தோண்டி குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டது. அதன் பின்னர் அந்தப்பகுதியில் சாலை போடப்பட்டது.

அதன் பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்தப்பகுதியில் புதிய சாலை போடப்பட்டு அதனை சமன் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த மற்றொரு லாரி ஏற்கனவே குடிநீர் குழாய் இணைப்பு பகுதி உடைந்த இடத்திலேயே பாரம் தாங்காமல் சிக்கியது. இதில் அந்த குடிநீர் குழாய் உடைந்து மீண்டும் தண்ணீர் வீணாக வெளியேறியது.

இதையடுத்து நேற்று புதிதாக போடப்பட்ட இந்த தார்ச்சாலையை மீண்டும் தோண்டி எடுத்து அதன் பின்னர் இந்த குடிநீர் இணைப்பு குழாயை ஊழியர்கள் சரி செய்தனர்.

பேரூராட்சி பகுதியில் தரம் இல்லாத குடிநீர் குழாயை போட்டதால்தான் இவ்வாறு அடிக்கடி குழாய்கள் உடைந்து போகின்றன என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் குழாய் உடைப்பு காரணமாக புதிதாக போடப்பட்ட சாலையையும் உடைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com