மத்தியில் மோடி ஆட்சி அமைந்த பிறகு இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது

மத்தியில் மோடி ஆட்சி அமைந்த பிறகு இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
மத்தியில் மோடி ஆட்சி அமைந்த பிறகு இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது
Published on

மங்களூரு,

உடுப்பி மாவட்டம் கார்கலா பகுதியில் நேற்று பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு கர்நாடக மாநில பா.ஜனதா சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில், ராஜ்நாத் சிங் கன்னடத்தில் பேச தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது.

கர்நாடகத்தில் முதல் முறையாக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். நான் எந்தப்பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டாலும், அங்கு பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. அதேபோல, இங்கும் பா.ஜனதா வெற்றி பெறும். கர்நாடகத்தில் பா.ஜனதா வெற்றி பெறுவது முக்கியமான ஒன்று. எடியூரப்பா தலைமையில் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்கள், தற்போது அவர்களை நிராகரிக்க முடிவு செய்துவிட்டனர்.

ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சி பாதையில் செல்லும்போது, கர்நாடகம் மட்டும் பின்னோக்கி செல்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், அதன் வளர்ச்சி ஜீரோவாக உள்ளது. 13-வது நிதி ஆணையத்தில் கர்நாடகத்துக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் அந்த நிதியை சரியாக பயன்படுத்தாமல், ஊழல் செய்துவிட்டனர்.

இதனால் வளர்ச்சி பணியில் கர்நாடகம் பின்தங்கி விட்டது. மத்திய அரசு வளர்ச்சிக்காக ஒதுக்கிய நிதி எங்கு போனது. அவற்றை காங்கிரஸ் கட்சியினர் கொள்ளை அடித்து தங்கள் வீடுகளில் பதுக்கி வைத்துள்ளனர். ஒரு நாணயத்தின் 2 முகங்களை போல, ஊழலில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமைந்த பிறகு இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது. வாஜ்பாய்க்கு அடுத்து மோடி ஊழலற்ற ஆட்சியை வழங்கி வருகிறார். திப்பு ஜெயந்தியை கொண்டாடும் கர்நாடக காங்கிரஸ் அரசு, அனுமன் ஜெயந்தியை கொண்டாடாதது ஏன்?.

மாநிலத்தின் வளர்ச்சி பற்றி நேரடி விவாதத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் தயாராக இல்லை. இதனால் தான் சித்தராமையா தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்பி வருகிறார்.

ஊழலற்ற, திறமையான நிர்வாகம் கொடுப்பவர்கள் தான் ஆட்சிக்கு வர வேண்டும். எடியூரப்பாவின் சாதனைகளை கர்நாடக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். எடியூரப்பா ஆட்சியில் இருந்தபோது, ஜீரோ வட்டியில் கடன் வழங்கப்பட்டது. ஆனால் சித்தராமையா ஆட்சியில், ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்டுள்ள விவசாயிகளின் குடும்பத்தினருக்கு சித்தராமையா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குகிறார்.

ஆனால், விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லாமல் சித்தராமையா செயல்பட்டு வருகிறார். சித்தராமையாவின் ஆட்சியில் விவசாயிகளின் வாழ்க்கை கேள்வி குறியாகி உள்ளது. மத்தியில் மோடி ஆட்சியில், விவசாயிகளின் வருமானத்தை 1 மடங்கு அதிகரிக்க செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் உடுப்பி-சிக்கமகளூரு தொகுதி எம்.பி. ஷோபா கலந்துகொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com