நாகையில், 2-வது நாளாக பலத்த மழை குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது

நாகையில், 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
நாகையில், 2-வது நாளாக பலத்த மழை குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது
Published on

நாகப்பட்டினம்,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மழை காரணமாக நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தில் உள்ள சுனாமி குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்தது.

2-வது நாளாக பலத்த மழை

இந்த நிலையில் நேற்றும் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. காலையில் இருந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பால்பண்ணை சேரி, சிவசக்தி நகரில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். மாலையில் வீடு திரும்பிய பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நனைந்து கொண்டே சென்றனர்.

இந்த பகுதியில் கழிவுநீர் குப்பைகள் தேங்கி உள்ளதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளான அத்திப்புலியூர், குருக்கத்தி, கீவளூர், தேவூர், வலிவலம், விடங்கலூர், கோகூர், கடம்பங்குடி, வெங்கிடங்கால், திருகண்ணங்குடி, ஆழியூர், சிக்கல், ஓரத்தூர், ஆவராணி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நடவு செய்த வயல்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. தொடர்மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திட்டச்சேரி

வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் திட்டச்சேரி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அந்த மழை நேற்று பகலிலும் நீடித்தது. மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் வயல்களில் நேரடி நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளது.

இந்த மழையால் பயிர்களுக்கு உரம் இடுதல், கைத்தெளிப்பான்கள் மூலம் களைக்கொல்லி மருந்துகள் தெளிப்பவை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திட்டச்சேரி பகுதியில் மின்சாரம் தடைபட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com