நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Published on

தாளவாடி,

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து திண்டுக்கல் நத்தம் பகுதிக்கு மாங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கார்த்தி (வயது 30) என்பவர் ஓட்டினார். காலை 8 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 23-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மாங்காய்கள் ரோட்டில் சிதறின.

இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார் மட்டுமே செல்ல முடிந்தது. மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. சத்தியமங்கலத்தில் இருந்து சென்ற வாகனங்கள் பண்ணாரி சோதனை சாவடியிலும் கர்நாடகத்தில் இருந்து வந்த வாகனங்கள் ஆசனூர் சோதனை சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். இதற்கிடையே அந்த வழியாக வந்தவர்கள் சிதறி கிடந்த மாங்காய்களை அள்ளி ரோட்டோரம் குவித்தனர்.

பின்னர் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. காலை 10 மணி அளவில் லாரி மீண்டும் புறப்பட்டு சென்றது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகியது. பின்னர் வாகனங்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன. திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com