

தாம்பரம்,
நடிகர் வடிவேலு நடித்த மாயி என்ற படத்தில் மதுபோதையில் நிற்கும் அவர், பஸ்சை வழிமறித்து ரகளையில் ஈடுபடுவார். அதேபோன்று சென்னையை அடுத்த குரோம்பேட்டையிலும் போதை ஆசாமி ஒருவர், மாநகர பஸ்சை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை குரோம்பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள ஜி.எஸ்.டி. சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர், நடுரோட்டில் படுத்து கூச்சலிட்டார்.
பின்னர் எழுந்த அவர், நடுரோட்டில் தள்ளாடியபடியே வேகமாக நடந்து சென்று, எதிரே வந்த மாநகர பஸ்சை தனது கைகளால் மறித்து நிறுத்த முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாநகர பஸ் டிரைவர், உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டார்.
ஆனால் போதை ஆசாமி, தானே கையால் பஸ்சை தடுத்து நிறுத்தியதுபோல் உற்சாகத்தில் மீண்டும் கூச்சலிட்டார். பின்னர் டிரைவரிடமும் ரகளையில் ஈடுபட்டார். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நடுவழியில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போதை ஆசாமியே அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்த சிலர், அதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வருகிறார்கள். இதை பார்த்த குரோம்பேட்டை போலீசார், போதை ஆசாமியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நாகல்கேணி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 42) என்ற அந்த போதை ஆசாமியை கைது செய்த போலீசார், பொது இடத்தில் இடையூறு செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பினர்.