

வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள பொதுமக்களின் முக்கிய பிரச்சினையாக இருந்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு முடிவு செய்து கடந்த 2016-ம் ஆண்டு நகராட்சி சார்பில் 149 இடங்களில் ரூ.10 கோடி செலவில் 21 வார்டுகளிலும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நகராட்சியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் பொதுமக்கள் இலவசமாக குடிநீரை பிடித்து சென்றனர்.
இந்த குடிநீர் திட்டமே மறைமலைநகர் பகுதியில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது.
தற்போது கோடை காலம் என்பதால் மறைமலைநகர் நகராட்சியில் பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. தற்போது நகராட்சிக்கு உட்பட பேரமனூர், ஸ்ரீராம் நகர், பொத்தேரி, மல்ரோசபுரம், சங்கர் நகர், பாரதி நகர், பராசக்தி நகர், கீழக்கரணை, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் பல முறை நகராட்சியில் புகார் தெரிவித்தும் பழுது நீக்கப்படாமல் பல மாதங்களாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பூட்டியே கிடக்கிறது.
இதனால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கும் நிலை உருவாகிவிடும், எனவே பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை சரி செய்து மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும்.
பழுது அடைந்த சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்காமல் நகராட்சி நிர்வாகம் தனியாருடன் இணைந்து கீழக்கரணை பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு புதிதாக சுத்திகரிப்பு நிலையம் திறந்து அங்கு தண்ணீரை விற்பனை செய்து வருகிறது. எனவே கோடைகாலம் முடிவதற்குள் நகராட்சி அதிகாரிகள் பழுதடைந்து மூடியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை சரி செய்து திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.