

அம்பை:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள செம்பத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 46). என்ஜினீயரான இவர், மக்கள் தேசம் கட்சியின் மாநில இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் கல்லிடைக்குறிச்சியில் இருந்து செம்பத்திமேட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, காரில் வந்த மர்மகும்பல் திடீரென்று சுகுமாரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களுக்கும் சென்று வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஒரு வக்கீல் மற்றும் வீரவநல்லூர், பத்தமடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.