நாமக்கல் மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரிகள் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 511 மி.மீட்டர் மழை பெய்தும், பெரும்பாலான ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. எனவே நீர்வரத்து கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரிகள் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார கோரிக்கை
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே இயல்பான அளவை காட்டிலும் மழை குறைவாகவே பெய்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், கோடை காலத்தில் குடிநீருக்கும் ஆங்காங்கே தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு கோடை மழை ஓரளவு பெய்தாலும், தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்து உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 716 மி.மீட்டர் ஆகும். ஆனால் இதுவரை 511 மி.மீட்டர் மழை மட்டுமே பெய்து உள்ளது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் அதிக அளவில் வேளாண் பயிர்களை பயிர் செய்து இருந்தாலும், அவற்றை காப்பாற்ற முடியுமா? என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வறண்டு கிடப்பதே ஆகும். குறிப்பாக மாவட்டத்திலேயே பெரிய ஏரியான தூசூர் ஏரி மற்றும் எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளில் மிகவும் குறைவான தண்ணீரே தேங்கி உள்ளன. இந்த தண்ணீரை வைத்து எதுவும் செய்ய முடியாத நிலை இருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சுந்தரம் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்தாலும் கூட ஒருசில ஏரிகளில் மட்டுமே குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. பெரும்பாலான ஏரிகள் வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் ஏரிகளுக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததே ஆகும். கண் துடைப்புக்கு மட்டுமே சில இடங்களில் தூர்வாரப்படுகிறது. குறிப்பாக கொல்லிமலையில் பெய்யும் மழைநீர் காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளை நிரப்பி, தூசூர் ஏரிக்கு வரும். ஆனால் வரட்டாற்றில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாராத காரணத்தால் தண்ணீர் வருவது இல்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் வரட்டாறு மட்டும் இன்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் 511 மி.மீட்டர் மழை பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், சாரல் மழையே பெய்து உள்ளது. இந்த மழைநீர் அப்படியே பூமிக்குள் இறங்கி விடுகிறது. கனமழை பெய்தால் தான் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி ஏரிகளை நிரப்பும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com