போலீஸ் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் கணக்கு: வெளிமாநில குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை போலீஸ் கமிஷனர் தகவல்

போலீஸ் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி மோசடி முயற்சியில் ஈடுபட்டுள்ள வெளிமாநில குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
போலீஸ் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் கணக்கு: வெளிமாநில குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை போலீஸ் கமிஷனர் தகவல்
Published on

சென்னை,

சென்னையில் தொடர்ந்து செல்போன், ரொக்கப்பணம் மற்றும் தங்கச்சங்கிலி வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 13 பேர் சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 13 செல்போன்கள், ரொக்கப்பணம் மற்றும் தங்க சங்கிலி மீட்கப்பட்டது. 9 மோட்டார் சைக்கிள்கள், அரிவாள்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்கள், செல்போன்கள் போன்ற பொருட்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பார்வையிட்டு, குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சென்னை மயிலாப்பூர், ராயப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம் ராயபுரம் ஆகிய பகுதிகளில் நடந்த செல்போன் பறிப்பு மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் தொடர்புள்ள குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் பழைய குற்றவாளிகள் ஆவார்கள். பேசின்பிரிட்ஜில் நடந்த ரூ.2 லட்சம் வழிப்பறி சம்பவத்திலும் குற்றவாளிகள் கைதாகி உள்ளனர்.

போலீஸ் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி முயற்சியில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் பற்றி துப்பு கிடைத்துள்ளது. வெளிமாநிலங்களைச் சேர்ந்த அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் விரைவில் வெளிமாநிலங்களுக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்வார்கள்.

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளின் பெயர் விவரங்கள், அவர்களது செல்போன் நம்பர் போன்றவை வெளியிடப்பட்டுள்ளது. அது நல்ல பலனை கொடுத்துள்ளது. பொதுமக்கள் இரவு ரோந்து பணி போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவைப்படும் உதவிகளை பெற்று வருகிறார்கள்.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் 3 போலீசார் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறப்படும் புகார்கள் பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது உளவுப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர்கள் விமலா, ஸ்ரீதர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com