நெல்லை மாவட்டத்தில் ரூ.49¼ கோடியில் குடிமராமத்து பணிகள் அரசு கூடுதல் செயலாளர் பாலாஜி தகவல்

நெல்லை மாவட்டத்தில் ரூ.49¼ கோடியில் குடிமராமத்து பணிகள் நடந்து வருவதாக அரசு கூடுதல் செயலாளர் பாலாஜி தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் ரூ.49¼ கோடியில் குடிமராமத்து பணிகள் அரசு கூடுதல் செயலாளர் பாலாஜி தகவல்
Published on

நெல்லை,

தமிழக அரசின் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் பாலாஜி நேற்று நெல்லைக்கு வந்தார். அவர், பாளையங்கோட்டை, திருவேங்கடநாதபுரம், கோபாலசமுத்திரம், கொழுமடை, விஜயநாராயணபுரம் ஆகிய இடங்களுக்கு சென்று, அங்கு நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் பத்தமடை உள்ளிட்ட பகுதியில் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்ட பணியையும் பார்வையிட்டார்.

அப்போது அரசு கூடுதல் செயலாளர் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் நலன் கருதி சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி வடிநில கோட்ட பகுதியில் 84 பணிகள், தென்காசி சிற்றாறு வடிநில கோட்ட பகுதியில் 90 பணிகள், வைப்பாறு வடிநில கோட்ட பகுதியில் 10 பணிகள் உள்பட 185 பணிகள் நடந்து வருகின்றன.

இதன் மொத்த திட்ட மதிப்பு ரூ.49 கோடியே 30 லட்சம் ஆகும். இந்த திட்டத்தை பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள் செயல்படுத்திட திட்டமிடப்பட்டு உள்ளது. குடிமராமத்து பணிகள் தரமான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. பொதுமக்கள் குடிமராமத்து பணிகள் குறித்த புகார்கள், கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் சொர்ணகுமார் (தாமிரபரணி), ஜெயபால் (சிற்றாறு), உதவி செயற்பொறியாளர்கள் சங்கர்ராஜ், மணிகண்டராஜன், மதனசுதாகரன், தங்கராஜ், அண்ணாத்துரை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com