புதுவையில் இரவு நேர ஊரடங்கு ரத்து: கடைகள் செயல்பட நேரக்கட்டுப்பாடு கிடையாது கலெக்டர் அருண் உத்தரவு

புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும், கடைகள் செயல்பட நேரக்கட்டுப்பாடு கிடையாது என்றும் கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
புதுவையில் இரவு நேர ஊரடங்கு ரத்து: கடைகள் செயல்பட நேரக்கட்டுப்பாடு கிடையாது கலெக்டர் அருண் உத்தரவு
Published on

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக புதுவையில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை தொடர்ந்து மத்திய அரசு அவ்வப்போது ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அதற்கேற்றாற்போல் புதுவை மாநிலத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த தளர்வுகளின்படி வர்த்தக நிறுவனங்கள் காலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் மத்திய அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் புதுவையிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவினை கலெக்டர் அருண் பிறப்பித்துள்ளார்.

இந்த புதிய உத்தரவின்படி இரவு நேரத்தில் ஊரடங்கு எதுவும் கிடையாது. அனைத்து தொழில், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், தியேட்டர்கள், மதுபான பார்கள் நகராட்சி மற்றும் கலால்துறை உரிமம் வழங்கும்போது குறிப்பிட்ட நேரம் வரை திறந்து செயல்படலாம்.

புதுவை கடற்கரை சாலையில் மக்கள் நடமாட விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுகின்றன. பிற இதர வழிகாட்டு நெறிமுறைகள் அதேபோல் தொடரும். இந்த உத்தரவுகள் அனைத்தும் கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு வெளியே உள்ள பகுதிகளில் உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கலெக்டர் அருண் கூறியுள்ளார்.

கலெக்டரின் உத்தரவினை தொடர்ந்து வர்த்தக நிறுவனங்கள், மதுபார்கள், கடைகள், தனியார் நிறுவனங்கள் போன்றவை ஊரடங்கு காலத்திற்கு முன்பு செயல்பட்டதுபோல் செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com