நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
Published on

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்பட 4 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத அரசு பஸ்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 போக்குவரத்து பணிமனைகளில் இருந்து கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்கள் மற்றும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூருக்கு 160 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 68 நாட்களுக்கு பிறகு பஸ்கள் ஓடியதால் தினக்கூலிக்கு செல்கிறவர்கள், அலுவலக மற்றும் தனியார் பணிகளுக்கு போகிறவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை, மேட்டுப்பாளையம் செல்ல பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

அதிக கட்டணம்

ஊட்டியில் தனியார் மினி பஸ்கள் இயங்கவில்லை. இருப்பினும், அந்த வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. அப்படியே தொலைதூர இடங்களுக்கு இயக்கினாலும், 31 பேருக்கு மேல் ஏற்ற அனுமதி இல்லாததால் பஸ்கள் நிறுத்தாமலேயே செல்கின்றன.

ஊட்டியில் இருந்து பிங்கர்போஸ்ட் வழியாக தலைகுந்தாவுக்கு பஸ்கள் ஓடவில்லை. கூடலூரில் இருந்து வரும் பஸ்களில் அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளி விட்டு பயணிகள் அமர வைக்கப்பட்டு இருப்பதால், ஊட்டிக்கு வரும் பயணிகள் மறித்தாலும் நிறுத்தாமல் டிரைவர்கள் செல்கின்றனர். இதனால் அவர்கள் ஆட்டோ அல்லது வாடகை வாகனம் மூலம் அதிக கட்டணம் செலுத்தி அத்தியாவசிய தேவைகளுக்கு வந்து செல்கிறார்கள்.

கூடுதல் பஸ்கள்

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த மக்கள் ஆட்டோக்களில் செல்ல பணம் இல்லாமல், பஸ்சுக்காக வெகு நேரம் காத்திருந்து விட்டு 6 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வருவதை காண முடிகிறது. நகரங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் வழித்தட பஸ்களில் கூட்டம் குறைந்ததால், சில பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. அதனால் கிராமங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க ஊட்டிக்கு வர முடியாமல் அவதி அடைந்து உள்ளனர். எனவே நீலகிரி மாவட்டத்தில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com