மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் திருச்சியில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என திருச்சியில் நடைபெற்ற பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் திருச்சியில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
Published on

திருச்சி,

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் கு.சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயல் தலைவர் பழனிபாரதி, பொதுச் செயலாளர் கோதண்டம், பொருளாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், மாநில இணை பொதுச்செயலாளர் முத்துக்குமரன் உள்பட மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் 25 ஆயிரம் ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு டாஸ்மாக் பணியாளர்களை அந்த இடங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

டாஸ்மாக் பணியாளர் அனைவருக்கும் அரசு சார்பில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர் கொரோனாவால் தாக்கப்பட்டு இறந்தால் அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆய்வு என்ற பெயரில் பணியாளர்களிடம் கெடுபிடி செய்வதை கைவிட வேண்டும். இரட்டை அபராதம் விதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகள் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், வட்டார அளவிலும், பேரூராட்சி, ஊராட்சி அளவிலும் டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை மற்றும் கருப்பு சேலை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது.

அதன் பின்னரும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் வருகிற 28-ந்தேதி (அக்டோபர்) சென்னையில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் பணியாளர்கள் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com