

திசையன்விளை,
நெல்லை கிழக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராதாபுரம், நாங்குநேரி, திசையன்விளை தாலுகா பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் 3 அடி முதல் 10 அடி வரையிலான 78 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. ஆங்காங்கே வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று மதியம் பல்வேறு வாகனங்களில் திசையன்விளை போலீஸ் நிலையம் அருகில் கொண்டு வரப்பட்டன. மேலும் இந்து அன்னையர் முன்னணி சார்பில் திசையன்விளை பகுதியில் உள்ள வீடுகளில் வைத்து பூஜிக்கப்பட்ட ஒரு அடி உயரம் உள்ள சுமார் 30 விநாயகர் சிலைகளை பெண்கள் ஊர்வலமாக போலீஸ் நிலையம் அருகே கொண்டு வந்தனர். அங்கு இருந்து அனைத்து விநாயகர் சிலைகளும் ஏராளமான வாகனங்களில் மாலையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில பொது செயலாளர் அரசுராஜா, கோட்ட தலைவர் தங்க மனோகர், மாவட்ட செயற்குழு வைத்தியநாதன், ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு, இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் மாயக்கூத்தன், பா.ஜனதா ஒன்றிய தலைவர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் திசையன்விளை மெயின்ரோடு, இடையன்குடி ரோடு வழியாக உவரியை சென்று அடைந்தது. அங்கு அனைத்து விநாயகர் சிலைகளும் சுயம்புலிங்க சுவாமி கோவில் முன்பு அணிவகுத்து நின்றன. பின்னர் விநாயகர் சிலைகளுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு உவரி கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.