நாடாளுமன்ற தேர்தலில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் - அரூர் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று அரூரில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் - அரூர் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
Published on

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அரூர் கச்சேரிமேடு ரவுண்டானாவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வக்கீல் பிரிவு துணைத்தலைவர் ஆர்.ஆர்.பசுபதி தலைமை தாங்கினார். முன்னாள் நகர செயலாளர் ராஜா வரவேற்றார்.

மாவட்ட துணை செயலாளர் செண்பகம் சந்தோஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், மதிவாணன், ஜெயப்பிரகாசம், புள்ளியப்பன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் சம்பத்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சிற்றரசு, நிர்வாகி பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தமிழக மக்களின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 2-ஆக உடைந்தது. அதை ஒன்றாக மீண்டும் இணைத்து வரலாற்று சாதனை படைத்தவர் ஜெயலலிதா. தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே உழைத்த அவர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அவரது மறைவுக்கு பிறகு அவருடைய வழியில் பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டது. ஜெயலலிதாவின் பிரசாரத்தின்போது மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது அவர் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன் என்று உறுதியளித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்த பின் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றினார். தொலைநோக்கு பார்வையோடு புதிய மின்திட்டங்களையும் அவர் அறிவித்து செயல்படுத்தினார். அவர் கொண்டு வந்த திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும்போது தமிழகம் உபரியாக மின்சாரத்தை சேமிக்கும் அளவுக்கு முன்னேற்றம் அடையும்.

கடைக்கோடி மக்களும் நிம்மதியாக வாழ வறட்சி காலங்களிலும் விலைவாசி உயராத வகையில் திறமையான நிர்வாகத்தை ஜெயலலிதா தலைமையிலான அரசு நடத்தியது. மு.க.ஸ்டாலின் தற்போது கிராமங்களுக்கு சென்று ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதே கிராமப்புற மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர் நிறைவேற்றாதது ஏன்?. நான் உள்பட அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறோம். விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னுரிமை அளிக்கிறோம்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது விளைநிலங்களை தி.மு.க.வினர் அபகரிப்பது அதிக அளவில் நடந்தது. இதை தடுக்கவே நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு என்ற ஒரு தனிப்பிரிவே காவல்துறையில் அமைக்கப்பட்டது. தற்போது இந்திய அளவில் சட்டம்-ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இதற்காக விருதும் வாங்கி உள்ளது. தி.மு.க.வில் குடும்ப அரசியல் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது. மு.க.ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டும் என்றே பொதுமக்களிடம் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து விடும் என்று அவர் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார். ஆனால் இந்த ஆட்சி 2 ஆண்டுகளை கடந்து 3-வது ஆண்டிலும் அடியெடுத்து வைத்து விட்டது. மக்கள் நலத்திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறோம். பொங்கல் விழாவின் போது அனைத்து வீடுகளிலும் பொங்கல் வைக்க வேண்டும் என்பதற்காக தலா ரூ.1,000 உதவி வழங்கினோம். அதை தி.மு.க.வினர் தடுக்க நினைத்தனர். நாம் இன்னும் மக்களுக்கு கொடுத்து கொண்டே இருப்போம்.

அ.தி.மு.க. அரசு செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்களை எதிர்ப்பதே தி.மு.க.வின் வேலை. பருவமழை காலங்களில் உபரிநீரை சேமிக்கும் வகையில் ஏரிகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை அருகே 400 ஏக்கர் பரப்பளவில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் உணவு பூங்கா அமைக்க உள்ளோம். இதேபோல் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் மிக பிரமாண்டமான முறையில் கால்நடை பூங்கா ரூ.396 கோடி மதிப்பில் 900 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. கால்நடைகளின் மேம்பாட்டிற்காக ஆராய்ச்சி நிலையமும் அமைக்கப்படும்.

எம்.எல்.ஏ.க்களாக இருந்த அரூரை சேர்ந்த முருகன், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த பழனியப்பன் ஆகிய 2 பேரும் கட்சிக்கு துரோகம் செய்து விட்டு டி.டி.வி.தினகரனுடன் சேர்ந்து உள்ளனர். இவர்கள் பதவிக்கு வர அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து உள்ளனர். நன்றியை மறந்து கட்சிக்கு துரோகம் செய்த இவர்கள் 2 பேரும் வாழ்க்கையில் பல்வேறு சோதனைக்கு ஆளாகுவார்கள்.

மேலும் இவர்கள் மக்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்த காரணத்தினாலே டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலோ அல்லது கூட்டணி சார்பிலோ போட்டியிடுபவர்களை வெற்றி பெற செய்து, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிங்காரம், குப்புசாமி, அப்புணு கவுண்டர், மாதப்பன், மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாநில இளைஞர் பாசறை இணை செயலாளர் கே.பி.ஆனந்த், முன்னாள் நகர துணை செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் கோபால், சிவப்பிரகாசம், வேலுமணி, பெரியண்ணன், செல்வராஜ், குமார், கோவிந்தசாமி, ராஜேந்திரன், நிர்வாகி ஏ.ஆர்.எஸ்.எஸ்.பாபு உள்பட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் நகர துணை செயலாளர் வேலு நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com