பாராளுமன்ற தேர்தலில் ‘‘தேசிய கட்சிகளுடன் அ.ம.மு.க. கூட்டணி வைக்காது’’ தங்க தமிழ்செல்வன் பேட்டி

‘‘பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுடன் அ.ம.மு.க. கூட்டணி வைக்காது‘‘ என்று தங்க தமிழ்செல்வன் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் ‘‘தேசிய கட்சிகளுடன் அ.ம.மு.க. கூட்டணி வைக்காது’’ தங்க தமிழ்செல்வன் பேட்டி
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்து நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்து இருந்தனர். அவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன், நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே ஜெயலலிதா முதல்அமைச்சராக இருந்தபோது, இந்த பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். எனவே, தமிழக அரசு இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கமிட்டி அமைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்படுகிறது. அந்த குற்றத்திற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்று நிரூபிக்கவேண்டியது அவருடைய பொறுப்பு. அதுவரை அவர் முதல்அமைச்சர் பதவியில் இருந்து விலகி வேறு ஒருவரை முதல்அமைச்சராக நியமிக்கவேண்டும். பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து 40 தொகுதியிலும் வெற்றி பெற்றால் தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து அவர்களை ஆட்சியில் அமர்த்தினால் நமது கோரிக்கை நிறைவேறாது. எனவே தான் மாநில கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்று கூறுகிறேன். நாங்கள் தேசிய கட்சிகளுடன் கண்டிப்பாக கூட்டணி வைக்கமாட்டோம். மாநில கட்சிகள் வந்தால் கூட்டணி வைப்போம். இல்லை எனில் தனித்து போட்டியிட்டு 40 பாராளுமன்ற தொகுதியிலும், 20 சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்று, அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com