ஆம்பூரில் போலீசார் முன்னிலையில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு - போலீஸ் குவிப்பு

ஆம்பூரில் போலீசார் முன்னிலையில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அதை தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஆம்பூரில் போலீசார் முன்னிலையில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு - போலீஸ் குவிப்பு
Published on

ஆம்பூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 12-ந் தேதி தளர்வில்லா ஊரடங்கின்போது அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முகிலன் என்ற வாலிபர் தனது மோட்டார்சைக்கிளில் பஸ் நிலையத்தை நோக்கி சென்றார். அப்போது வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே தேசியநெடுஞ்சாலை சந்திப்பில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், முகிலனை தடுத்து நிறுத்தி அவரின் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். போலீசார், அவரின் மோட்டார்சைக்கிளை தராததால், முகிலன் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு வந்து போலீசார் முன்னிலையில் தற்கொலை செய்யப்போவதாக கூறி திடீரென தீக்குளித்தார். இதில் உடல் முழுவதும் தீயில் கருகிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டனர். பின்னர் அவர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்பட 5 பேர் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக போலீஸ்காரர் சந்திரசேகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பரிதாப சாவு

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் முகிலன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் ஆம்பூருக்குக் கொண்டு வரப்பட்டது. அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்புப் போட்டப்பட்டு இருந்தது.

தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட முகிலன் வீட்டுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி, போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் எம்.மதியழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com