தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் - சித்தராமையா வீடு திரும்பினார்

பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வீடு திரும்பினார். ஒரு வாரம் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் - சித்தராமையா வீடு திரும்பினார்
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இடைத்தேர்தலில் பா.ஜனதா 12 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவை சந்தித்தது. இதனால் சித்தராமையா தனது சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில் சித்தராமையாவுக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு பிரச்சினை உண்டானதால், கடந்த 11-ந் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யப்பட்டு, ரத்த குழாயில் ஸ்டென்ட் கருவியை டாக்டர்கள் வெற்றிகரமாக பொருத்தினர்.

அதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் குணம் அடைந்து வந்தார். அவரை மருத்துவமனையில் முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மந்திரிகள் ஈசுவரப்பா, சி.டி.ரவி, பசவராஜ் பொம்மை, ஸ்ரீராமுலு, காங்கிரஸ் தலைவர்கள் பரமேஸ்வர், தினேஷ் குண்டுராவ் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், ரமேஷ் ஜார்கிகோளி, பி.சி.பட்டீல் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

விரைவாக குணம் அடைய தங்களின் வாழ்த்துக்களையும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் மடாதிபதிகள் பலரும் நேரில் சித்தராமையாவிடம் நலம் விசாரித்து விரைவில் குணம் அடைய ஆசி வழங்கினர். இந்த நிலையில் பூரண குணம் அடைந்ததை அடுத்து சித்தராமையா நேற்று தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். அவர் வீடு திரும்புவதற்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2000-ம் ஆண்டு எனக்கு ரத்த குழாயில் 2 இடங்களில் அடைப்பு ஏற்பட்டது கண்பிடிக்கப்பட்டது. அப்போது ரத்த குழாயில் அடைப்பை நீக்கி ஸ்டென்ட் கருவியை பொருத்தினர். அதன் பிறகு நான் சுகாதாரமாக இருந்தேன். 19 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரத்த குழாயில் இன்னொரு இடத்தில் 95 சதவீதம் அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதற்கு சிகிச்சை பெற இந்த மருத்துவமனையில் சேர்ந்தேன். இங்கு டாக்டர்கள் எனக்கு ஸ்டென்ட் கருவியை பொருத்தினர்.

இங்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் நன்றாக கவனித்து சிகிச்சை அளித்தனர். இப்போது நான் நன்றாக, ஆரோக்கியமாக உள்ளேன். எனது ஆதரவாளர்கள் உள்பட யாரும் எனது உடல் நலனை பற்றி கவலைப்பட தேவை இல்லை. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அரசியல்வாதிகள் நாங்கள் அரசியல் ரீதியாக மோதிக்கொள்கிறோம். ஆனால் அதை தாண்டி தனிப்பட்ட முறையில் நாங்கள் நட்புடனேயே இருக்கிறோம். அரசியலில் நிரந்தர எதிரிகளோ, நண்பர்களோ இல்லை.

அதனால் அரசியலை தாண்டி அனைத்துக்கட்சியினரும் வந்து என்னை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது ஆதரவாளர்கள் கோவில்களில் பூஜைகளை செய்து வழிபட்டனர். அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

ஒரு வாரம் ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். அதன்படி ஒரு வாரம் வீட்டில் ஓய்வு எடுப்பேன். அதன் பிறகு மீண்டும் அரசியல் பணிகளில் ஈடுபடுவேன். அரசியல் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை. இங்கு அத்தகைய கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

சித்தராமையாவுக்கு சிகிச்சை அளித்த இதயநோய் நிபுணரான டாக்டர் ரமேஷ் கூறுகையில், சித்தராமையாவின் உடல்நிலை தற்போது அனைத்து ரீதியிலும் சரியாக உள்ளது. தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளோம். 15 நாட்களுக்கு பயணங்களை தவிர்க்குமாறும் கூறியுள்ளோம் என்றார்.

சித்தராமையா அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது, அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் வாழ்த்து கோஷங்களை முழங்கினர். அவரது அருகில் நின்று செல்பி எடுக்க முண்டியடித்தனர். இதனால் அவர் காரில் ஏறும்போது லேசான நெரிசல் ஏற்பட்டது. அதன் பிறகு சித்தராமையா அங்கிருந்து விடைபெற்று சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com