குடியிருப்பு பகுதியில், குப்பைகளை கொட்ட வந்த நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

விருத்தாசலத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட வந்த நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியிருப்பு பகுதியில், குப்பைகளை கொட்ட வந்த நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
Published on

விருத்தாசலம்,

விருத்தாசலம் பழத்தோட்ட சாலை பகுதியில் ஏ.பி. நகர் அமைந்துள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளின் மத்தியில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த கருவேல மரங்கள் உள்ள இடத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.

இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும், குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஒன்று திரண்டனர்.

அந்த சமயத்தில் குப்பைகளை அள்ளிக் கொண்டு நகராட்சி வாகனம் கருவேல மரங்கள் இருந்த பகுதிக்கு வந்தது. இதை பார்த்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் இறைச்சி கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் எங்களால் வீடுகளில் இருக்க முடியவில்லை.

மேலும் நாய்களும், பன்றிகளும் குவிந்து கிடக்கும் குப்பைகளில் மேய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் குப்பைகளை கொட்டக்கூடாது. மேலும் ஏற்கனவே கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றனர்.

அதற்கு நகராட்சி ஊழியர்கள், இனிமேல் இப்பகுதியில் குப்பைகளை கொட்ட மாட்டோம் என கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் நகராட்சி வாகனத்தை விடுவித்து கலைந்து சென்றனர். தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள், வாகனத்தை அங்கிருந்து எடுத்து சென்று பெரியவடவாடியில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்டினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com