ஓட்டப்பிடாரம் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்

ஓட்டப்பிடாரம் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 6 பேர் காயம் அடைந்தனர்.
ஓட்டப்பிடாரம் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்
Published on

ஓட்டப்பிடாரம்,

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள குப்பக்குறிச்சி, பதினாலாம்பேரி பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றி கொண்டு ஒரு வேன் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரத்தில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் நிறுவனத்துக்கு சென்று கொண்டு இருந்தது. அந்த வேனை குப்பக்குறிச்சியை சேர்ந்த துரைப்பாண்டி (வயது 40) என்பவர் ஓட்டினார்.

வேன் நேற்று காலை 9 மணிக்கு புதியம்புத்தூர் அருகே வந்தது. அப்போது சாலையில் ஒரு லாரி திரும்பியது. அதன் மீது மோதாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வேன் டிரைவர் வேனை திடீரென நிறுத்தினார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த குப்பக்குறிச்சியை சேர்ந்த மரிய பூலம்மாள் (46), ராமலட்சுமி (32), வேன் டிரைவர் துரைப்பாண்டி உள்ளிட்ட 6 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் புதியம்புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com