சேலம் மாநகரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுமையாக செயல்பட வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

சேலம் மாநகரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
சேலம் மாநகரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுமையாக செயல்பட வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
Published on

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ரோகிணி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் கொடுத்துள்ள மனுவில், மாநகரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுமையாக செயல்பட வேண்டும். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளப்பட்டி சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் சரிவர கவனிக்காததால் ஒரு பெண்ணுக்கு முறையாக வளர்ச்சி இன்றி பிறந்த குழந்தை இறந்தது. இதில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சின்ன சீரகாபாடியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த டால்மியா போர்டு பகுதியை சேர்ந்த அர்ஜூனன் (வயது 60), அவருடைய மனைவி ராணி ஆகியோர் தங்கள் கோரிக்கை குறித்து கலெக்டர் ரோகிணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கலெக்டரிடம் கூறும் போது, எங்களுக்கு குழந்தைகள் இல்லை. ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை விற்பனை செய்வதற்கும், அதன் மூலம் கிடைக்கும் பணபலன்களை பெறவும் தடையாக உள்ள உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள். இந்த மனு மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com