தென் மாவட்டங்களில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரிப்பா? போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி பேட்டி

தென் மாவட்டங்களில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்துள்ளதா? என்பதற்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி பதில் அளித்தார்.
தென் மாவட்டங்களில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரிப்பா? போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி பேட்டி
Published on

நெல்லை,

நெல்லை அருகே தூத்துக்குடி மாவட்ட எல்லையான வல்லநாட்டை அடுத்த மணக்கரை மலையடிவாரத்தில், பல்வேறு கொலைவழக்குகளில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துரைமுத்துவை பிடிப்பதற்காக நேற்று முன்தினம் மதியம் தனிப்படை போலீசார் சென்றனர். அப்போது ரவுடி துரைமுத்து திடீரென்று போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதில், போலீஸ்காரர் சுப்பிரமணியன் தலைசிதறி பரிதாபமாக உயிரிழந்தார். வெடிகுண்டு வெடித்ததில் ரவுடி துரைமுத்துவும் பலியானார்.

இந்த நிலையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நேற்று காலையில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு வந்தார். அவர், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த போலீஸ்காரர் சுப்பிரமணியனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் சுப்பிரமணியன் படத்துக்கு மாலை அணிவித்தார்.

முன்னதாக, டி.ஜி.பி. திரிபாதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரவுடி துரைமுத்துவை பிடிக்க சென்றபோது வெடிகுண்டு வீசப்பட்டதில் போலீஸ்காரர் சுப்பிரமணியன் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் எந்த பாரபட்சமும் இல்லை. நாங்கள் அரசுக்கு அளித்த முதல் தகவல் அறிக்கையின்படி, இந்த நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் முழுமையான அறிக்கையை அரசுக்கு வழங்கியவுடன், நிவாரணம் குறித்து அரசு முடிவு செய்யும். காவல் துறையின் தலைவர் என்ற முறையில் போலீஸ்காரர் சுப்பிரமணியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறவும் நேரில் வந்துள்ளேன்.

தென் மாவட்டங்களில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரிக்கவில்லை, மாறாக குறைந்துள்ளது. இதற்காக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டு வெடிகுண்டில் குண்டூசி, பீங்கானுக்கு பதிலாக ஆணிகளை கலந்து தயாரிப்பதாக கூறுகிறீர்கள். ரவுடிகள் புதிய டெக்னாலஜியை பயன்படுத்தினால், அவர்களை பிடித்து கைது செய்வதற்கும் போலீசார் புதிய டெக்னாலஜியை பயன்படுத்துவார்கள்.

குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போலீசாருக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும். இதுதொடர்பாக டி.ஐ.ஜி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு மூலம் போலீசாருக்கு தகுந்த பயிற்சி வழங்கப்படும்.

போலீஸ்காரர் சுப்பிரமணியனுக்கே பாதுகாப்பு இல்லை என்று அவரது சகோதரர் கூறியதாக தெரிவிக்கின்றீர்கள். அவ்வாறு கூறுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. போலீசார் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்துள்ளோம். போலீசாரின் கஷ்டங்கள் அனைத்தும் தெரியும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும். ரவுடி துரைமுத்து என்கவுண்ட்டர் செய்யப்படவில்லை. போலீஸ்காரர் சுப்பிரமணியனுக்கு காவல் துறை சார்பில் நிதி உதவி வழங்குவது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர், துணை கமிஷனர் சரவணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன் (நெல்லை), ஜெயக்குமார் (தூத்துக்குடி) மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

போலீஸ்காரர் சுப்பிரமணியன் மறைவையொட்டி, நெல்லை சரகத்துக்கு உட்பட்ட அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நேற்று அவரது உருவப்படத்துக்கு போலீசார் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com