சென்னை புறநகர் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை புறநகர் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Published on

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தாம்பரம் வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில், அனைத்து ஜமாத்துகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம் வட்டார உலமா சபை தலைவர் ஆதம் ஷபியுல்லா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே முஸ்லிம்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக ஆர்.கே.நகர் நேதாஜி நகரில் இருந்து பெண்கள் உள்பட ஏராளமான பர்மா முஸ்லிம்கள் பேரணியாக வைத்தியநாதன் பாலம் அருகே வந்தடைந்தனர். பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் ஹாஜி எஸ் சர்புதீன் தலைமையில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முஸ்லிம் அமைப்பினர் மற்றும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சா.மு.நாசர், திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார், பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி பாலசிங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., ஐ.என்.டி.ஜே. உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பல்லாவரம் அடுத்த பம்மல் இரட்டை பிள்ளையார் கோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் நிசார் அகமது தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம், விடுதலை செழியன், பஷீர்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com