சென்னை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு ஹெராயின் போதைப்பொருள் விற்ற 3 பேர் கைது

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்ற வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு ஹெராயின் போதைப்பொருள் விற்ற 3 பேர் கைது
Published on

ஆலந்தூர்,

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஹெராயின், ஐஸ் கிறிஸ்டல் போன்ற போதைப்பொருட்களை ஒரு கும்பல் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

இதையடுத்து, தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது பள்ளிக்கரணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, கல்லூரி மாணவர் ஒருவரிடம் இருந்த சிறிய பொட்டலத்தை போலீசார் பிரித்து பார்த்தபோது, ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.

உடனே அந்த கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரித்ததில், சென்னை மண்ணடியில் உள்ள நண்பர் ஒருவர் அந்த போதைப்பொருளை கொடுத்ததாக கூறினார்.

பின்னர் போலீசார் மண்ணடியில் உள்ள அவரது நண்பரை பிடித்து விசாரித்தனர். அவர் தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாகவும், வியாசர்பாடி எம்.கே.பி.நகரில் போதைப்பொருட்கள் வாங்கியதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, போலீசார் வியாசர்பாடி எம்.கே.பி. நகருக்கு விரைந்து சென்று அங்குள்ள ஒரு வீட்டில் இருந்து 40 கிராம் எடை கொண்ட ஹெராயின், 4 செல்போன்கள், ரூ.13 ஆயிரத்து 800 ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.

மேலும் வீட்டில் பதுக்கி வைத்து விற்ற மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சபீர் அகமது (28), ஜவாறிரூல் ஷேக்(22), தாரூல் இஸ்லாம்(26), ஆகியோரை கைது செய்தனர். பின்னர் மேல் விசாரணைக்காக பிடிபட்ட 3 பேரையும் சென்னை போதை தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com