புறநகர் பகுதிகளில், முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது - எல்லையில் வெளிமாநில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

புறநகர் பகுதிகளில் முழு ஊரடங்கால் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. எல்லையில் வெளிமாநில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
புறநகர் பகுதிகளில், முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது - எல்லையில் வெளிமாநில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
Published on

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று மாநில எல்லை பகுதிகளான முள்ளோடை, மதகடிப்பட்டு, சேதராப்பட்டு, கனகசெட்டிக் குளம் பகுதிகள் தடுப்புகளால் அடைக்கப்பட்டு, போலீசார் கெடுபிடி காட்டினர்.

முள்ளோடையில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டராமன், ராஜசேகர வல்லாட் ஆகியோர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தனசேகரன், தன்வந்திரி மற்றும் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழக பகுதியான கடலூரில் இருந்து உரிய அனுமதி இன்றி வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மருத்துவ தேவைக்கு வந்த வாகனங்கள் மற்றும் புதுவை பகுதியில் உள்ள தமிழக பகுதிக்கு வேலைக்கு வந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

அரியாங்குப்பத்தில் புறவழிச்சாலை, வீராம்பட்டினம் சந்திப்பு பகுதியில் சாலையின் குறுக்கே தடுப்புகளை வைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து விசாரித்தனர். உரிய காரணம் இன்றி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் புறநகர்களான வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை, பாகூர், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் முக்கிய சாலைகளிலும் இரும்புத் தட்டிகள் மற்றும் மர கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. கிராமப்புறங்களான கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், மடுகரை ஆகிய பகுதிகளில் கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் சாலைகள் வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தன. பால் பூத், மருந்து கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருந்தன.

விழுப்புரம் சாலையில் மாநில எல்லையான மதகடிப்பட்டில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். விழுப்புரம் பகுதியில் இருந்து வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். முழு ஊரடங்கு காரணமாக கிராமப்புற பகுதியில் நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் போலீசாரின் கெடுபிடி குறைந்தது. இதனால் பல இடங்களில் வாகனங்கள் வழக்கம்போல் சென்றதை காண முடிந்தது.

காரைக்கால் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் பிரதான சாலைகளான பாரதியார் வீதி, திருநள்ளாறு வீதி, மாதா கோவில் வீதி மற்றும் 5 சட்டமன்ற தொகுதியிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பஸ், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காட்சியளித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com