சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு எதிரொலி மேகதாது அணை விவகாரம் குறித்து சட்ட நிபுணர்களுடன் குமாரசாமி ஆலோசனை

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மேகதாது அணை கட்டும் விவகாரம் குறித்து நேற்று பெங்களூருவில் சட்ட நிபுணர்கள், அரசு அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு எதிரொலி மேகதாது அணை விவகாரம் குறித்து சட்ட நிபுணர்களுடன் குமாரசாமி ஆலோசனை
Published on

பெங்களூரு,

ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது என்னும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது.

இதற்காக வரைவு திட்டம் ஒன்றையும் தயாரித்து மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு வழங்கியதுடன், புதிய அணை கட்டவும் அனுமதி கோரியது. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையையும் மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அதை ஏற்றுக் கொண்டு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் கடந்த மாதம் (நவம்பர்) 22-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

அத்துடன் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வழங்கும்படியும் கர்நாடக அரசின் நீர்ப்பாசனத்துறைக்கு மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மேகதாதுவில் புதிய அணைக்கட்டுக்கான சாத்தியக்கூறு அறிக்கையின் மீது மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் மேகதாதுவில் அணைகட்டுவதால் தமிழகத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்தும், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பது தொடர்பாகவும் பெங்களூருவில் நேற்று நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார். மேகதாதுவில் அணை கட்டுவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து அவர் ஆலோசித்ததாக தெரிகிறது.

அத்துடன் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பதால், அந்த வழக்கை எதிர்கொள்வது குறித்து சட்டநிபுணர்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசித்ததாகவும், அவர்கள் கூறிய ஆலோசனைகளையும் அவர் கேட்டு அறிந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை வழங்கும்படி கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. இந்த திட்டத்தை எதற்காக தமிழக அரசு எதிர்க்கிறது?. என்ன காரணத்திற்காக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்? உள்ளிட்ட தகவல்களை பெற்று, அதன்மீது கர்நாடக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும்.

இதுதொடர்பாக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள், சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். ஒட்டு மொத்தமாக மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவது அரசின் மிகப்பெரிய ஆசையாகும். மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு சரியான முடிவை எடுக்கும். இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com