

தஞ்சாவூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வைகோ தஞ்சை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.(இடையில் 1, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சுற்றுப் பயணம் கிடையாது).
தஞ்சை மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டியில் இன்று மாலை 5 மணிக்கு வைகோ பிரசாரத்தை தொடங்குகிறார்.
தொடர்ந்து பூதலூர், திருவையாறு வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் உள்ள 44 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். நாளை(திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு மருங்குளத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் வைகோ, ஒரத்தநாடு வடக்கு, தெற்கு மற்றும் திருவோணம் ஒன்றியங்களில் பிரசாரம் செய்து விட்டு இரவு 7.30 மணிக்கு ஒரத்தநாட்டில் நடக்கும் பொதுக்கூட்டத் தில் பங்கேற்று பேசு கிறார்.
2-ந் தேதி மாலை 5.30 மணிக்கு கரம்பயத்தில் பிரசாரத்தை தொடங்கி பட்டுக்கோட்டை நகரம், ஒன்றியம், மதுக்கூர் ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இரவு 8 மணிக்கு பட்டுக்கோட்டையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். 3-ந் தேதி மாலை 5.30 மணிக்கு உதயசூரியபுரத்தில் பிரசாரத்தை தொடங்கி திருச்சிற்றம்பலம், ஆவணம் கைகாட்டி, செம்பியன்மாதேவி பட்டினம், மல்லிப்பட்டினம், குருவிக்கரம்பை மற்றும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங் களில் சுற்றுப்பயணம் செய்கிறார். 5-ந் தேதி மாலை 5 மணிக்கு தாராசுரத்தில் பிரசாரத்தை தொடங்கும் வைகோ, சுவாமிமலையில் பிரசாரம் செய்துவிட்டு இரவு 7 மணிக்கு கும்பகோணத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். 7-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நாச்சியார்கோவிலில் பிரசாரத்தை தொடங்கி திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர், கதிராமங்கலம் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
8-ந் தேதி மாலை 5.30 மணிக்கு தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவிலில் பிரசாரத்தை தொடங்கும் வைகோ பூண்டி, சாலியமங்கலம், இரும்புத்தலை, திருக்கருக்காவூர், பாபநாசம், கபிஸ்தலம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளை காவிரி பாதுகாப்பு இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.