தஞ்சை சுற்றுலா மாளிகையில் வைத்திலிங்கம் எம்.பி.க்கு திடீரென மயக்கம் மருத்துவமனையில் அனுமதி

தஞ்சை சுற்றுலா மாளிகையில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி.க்கு நேற்று திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சை சுற்றுலா மாளிகையில் வைத்திலிங்கம் எம்.பி.க்கு திடீரென மயக்கம் மருத்துவமனையில் அனுமதி
Published on

தஞ்சாவூர்,

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான வைத்திலிங்கம் எம்.பி. தஞ்சை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டார். நேற்று காலையிலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு தஞ்சையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்தார்.

பின்னர் அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அப்போது அங்கு தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வந்தார். உடனடியாக அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கத்தை அழைத்துக்கொண்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்றார்.

வைத்திலிங்கம் எம்.பி. தனி காரிலும், அவரைத் தொடர்ந்து அமைச்சர் துரைக்கண்ணு தனி வாகனத்திலும் சென்றனர். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட வைத்திலிங்கம் எம்.பி.க்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததாக அ.தி.மு.க.வினர் கூறினர். வைத்திலிங்கம் எம்.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com