தஞ்சையில், போலீசார் விரட்டி சென்றபோது பாலத்தில் இருந்து குதித்த பிரபல ரவுடியின் கால் முறிந்தது - ஆஸ்பத்திரியில் அனுமதி

தஞ்சையில், போலீசார் விரட்டி சென்றபோது பாலத்தில் இருந்து குதித்த பிரபல ரவுடியின் கால் முறிந்தது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தஞ்சையில், போலீசார் விரட்டி சென்றபோது பாலத்தில் இருந்து குதித்த பிரபல ரவுடியின் கால் முறிந்தது - ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை முனியாண்டவர் காலனி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கோபி என்கிற வெடி கோபி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் இவர் இடம் பெற்றுள்ளார். தஞ்சை ஏ.ஒய்.ஏ.நாடார் தெருவை சேர்ந்தவர் அஜித். இவர் வேலைக்கு சென்று விட்டு சாந்தப்பிள்ளை கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த கோபி பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என அஜித் கூறியதால் ஆத்திரம் அடைந்த கோபி, தான் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தி விட்டு தப்பி சென்று விட்டார். இதில் காயம் அடைந்த அஜித், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில் கோபியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாறன், சோமசுந்தரம், கண்ணன், சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் பல்வேறு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தஞ்சை பூச்சந்தை பகுதியில் கோபி நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்த கோபி அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்து தனிப்படை போலீசார் விரட்டி சென்றனர்.

இருபது கண் பாலத்தில் ஓடிக்கொண்டிருந்த கோபி திடீரென பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டது.

இதனால் அவரால் எழுந்து ஓட முடியவில்லை. உடனே தனிப்படை போலீசார் அவரை பிடித்து கைது செய்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com