தேயிலை செடிகளில், கருகிய கொழுந்துகளை அகற்றும் பணியில் விவசாயிகள் மும்முரம்

தேயிலை செடிகளில் கருகிய கொழுந்துகளை அகற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
தேயிலை செடிகளில், கருகிய கொழுந்துகளை அகற்றும் பணியில் விவசாயிகள் மும்முரம்
Published on

குன்னூர்,

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மழை மற்றும் வெயில் ஆகிய காலநிலைகள் சம அளவில் இருக்கும்போது, பச்சை தேயிலை மகசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக பச்சை தேயிலை மகசூல் குறைந்து வருகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நீலகிரியில் பனிப்பொழிவு இருக்கும். குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் உறைபனி அதிகமாக பொழியும். இதனால் தேயிலை செடிகள் கருகிவிடும். மேலும் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்படும்.

அப்போது தேயிலை செடிகளை பாதுகாக்க செடிகளில் கருகிய கொழுந்துகளை விவசாயிகள் அகற்றிவிடுவார்கள். இதன் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் பெய்யும் கோடை மழையின்போது மீண்டும் செடிகளில் பச்சை தேயிலை மகசூல் அதிகரிக்க தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் நீலகிரியில் உறைபனி பொழிவு இருந்தது. தற்போது பகலில் கடும் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் நிலவுகிறது. இதனால் கடும் வறட்சி ஏற்பட்டு தேயிலை செடிகள் கருகிவிட்டன. இதையொட்டி கோடை மழையில் மகசூலை ஈட்ட தேயிலை செடிகளில் கருகிய கொழுந்துகளை அகற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மகசூல் இல்லாத காரணத்தால் விவசாயிகளுக்கு வருமானம் இல்லை. இதன் காரணமாக கூலிக்கு ஆட்கள் வைத்து, மேற்கண்ட பணியை மேற்கொள்ள முடிவதில்லை.

இதனால் விவசாயிகளே தங்களது தோட்டங்களில் எந்திரம் மூலம் தேயிலை செடிகளில் கருகிய கொழுந்துகளை அகற்றி வருகின்றனர். இதுகுறித்து குன்னூர் பகுதி விவசாயிகள் கூறும்போது, வறட்சியால் தேயிலை செடிகள் கருகி விட்டதால், வருமானம் இன்றி பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு உள்ளோம். இருப்பினும் கோடை மழையை எதிர்பார்த்து செடிகளில் கருகிய கொழுந்துகளை அகற்றி வருகிறோம். தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாத நிலையில் உள்ளதால், நாங்களே எங்களது தோட்டத்தில் அந்த பணியை மேற்கொண்டு வருகிறோம். கோடை மழையின்போது பச்சை தேயிலை மகசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்து இருக்கிறோம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com