

வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டு இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 10 பேர் இறந்தனர். இதன் காரணமாக வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.
பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமியையொட்டி தலா 3 நாட்களும் பிரதோஷத்தின் போது ஒரு நாள் மட்டும் என பக்தர்கள் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களைக் காட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் செயல்பட்டு வந்த தனியார் அன்னதான மடங்கள் மூடப்பட்டன. அன்னதான மடங்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் உணவு, தண்ணீரின்றி அவதிப்படும் நிலை உருவானது. அங்கு உள்ள ஓட்டல்களில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி நேற்று சதுரகிரி மலை அடிவாரப்பகுதியான தாணிப்பாறைக்கு வந்தார். அங்கு வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பின்னர் அவர் சதுரகிரி மலையில் ஏறி அடிப்படை வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டார். பக்தர்கள் குளிக்கும் இடம், அன்னதான கூடத்தை அவர் பார்வையிட்டார்.
அவர் நிருபர்களிடம் கூறும்போது, சதுரகிரியில் உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து நேரில் ஆய்வு செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆய்வுக்கு பின்னர் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆணையரிடம் கஞ்சி மட நிர்வாகிகளும், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பொன்னையா மற்றும் பக்தர்களும் கோரிக்கை மனு அளித்தனர். அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். இரவு கோவிலில் தங்கிய அவர் இன்று (வெள்ளிக்கிழமை) தாணிப்பாறை திரும்புவார் என தெரிகிறது.