

நாட்டறம்பள்ளி,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நாட்டறம்பள்ளியை அடுத்த டோல்கேட் கோமூட்டியூர் பகுதியில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 40) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு, கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
நேற்று காலை கோவிலை திறப்பதற்காக சண்முகம் வந்துள்ளார். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அம்மன் கழுத்தில் இருந்த 10 பவுன் நகை, 3 கிலோ எடையுள்ள ஐம்பொன் அம்மன் சிலை, 1 கிலோ எடையுள்ள அம்மன் வெள்ளி சிலை மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மர்ம நபர்கள் உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு, கோவில் அருகில் உள்ள நிலத்தில் உண்டியலை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
அதேபோல், கோவிலுக்கு அருகே வசிக்கும் விவசாயி சாமிநாதன் (60) என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து, அதில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 100 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.