தேளூர் ஊராட்சியில் ஆழ்குழாய் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவாடானை தாலுகா தேளூர் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஆழ்குழாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேளூர் ஊராட்சியில் ஆழ்குழாய் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
Published on

தொண்டி

திருவாடானை தாலுகா தேளூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் முன்னாள் ஊராட்சி தலைவர் ராமு, அ.தி.மு.க. ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் அய்யப்பன் ஆகியோர் திருவாடானையில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருவாடானை யூனியன் தேளூர் ஊராட்சியில் உள்ள 10 கிராமங்களில்2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த ஊராட்சியில் போதிய அளவில் குடிநீர் ஆதாரங்கள் இல்லை.

இதனால் கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இப்பகுதி மக்கள் நீண்டதூரம் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. கூட்டு குடிநீர் மூலம் எங்கள் ஊராட்சி கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் முழுமையாக இல்லை. ஒரு குடம் தண்ணீருக்கு தினமும் பல மைல் தூரம் நடந்து சென்றுதான் எடுத்து வரும் நிலை இருந்து வருகிறது. மேலும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றன.

கிராமத்தில் தற்போது நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிதாக ஆழ்குழாய் அமைக்க வேண்டும். மேலும் தேளூர் முதல் தொண்டி பேரூராட்சி எம்.ஆர்.பட்டினம் வரை உள்ள 3 கிலோ மீட்டர் சாலை பொதுமக்களின் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதேபோல் தொண்டி முதல் தேளூர் ஊராட்சி குருமிலாங்குடி வரையிலான சுமார் 3 கிலோமீட்டர் சாலையும் சேதமடைந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது. இந்த சாலைகளை உடனடியாக புதிய தார்ச்சாலையாக அமைத்து தரவேண்டும். தேளூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கண்மாய் பல ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. இக்கண்மாய் தற்போது தூர்ந்து போய்விட்டது. எனவே இந்த கண்மாயை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல ஏ.மணக்குடி கிராமத்தில் கடல்நீரும், மழைநீரும் கலக்கும் பகுதியை தூர்வார வேண்டும். இங்குள்ள சுனாமி குடியிருப்பு சாலைகள் சேதமடைந்து விட்ட நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. எனவே தார்ச்சாலை அமைத்து தரவேண்டும். கண்ணாரேந்தல் கிராமத்தின் வழியாக ஆர்.எஸ்.மங்கலத்திற்கு தொண்டியில் இருந்து பஸ் வசதி செய்து தரவேண்டும். புதுக்காடு கிழக்கு கடற்கரை சாலை முதல் காரங்காடு கிராமத்திற்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.

இதேபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தாலுகா செயலாளர் குருசாமி அளித்துள்ள மனுவில் ஆர்.எஸ்.மங்கலத்தில் சொந்த நிலம், வீட்டுமனை இல்லாத பிற்படுத்தப்பட்ட ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் ஏராளமான பொதுமக்கள் சாலை, குடிநீர் வசதி, கண்மாய் ஆழப்படுத்துதல், ஆழ்குழாய் அமைத்தல், முதியோர், விதவை உதவித்தொகை வழங்கக்கோரியும், முத்ரா வங்கி கடன், மாற்று திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாறுதல் வழங்க கோரியும், இலவச வீட்டுமனைகளை அளந்து தரக்கோரி நரிக்குறவர்களும் மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com