ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆற்று தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் சேதம் அடைந்த ஆரணி ஆற்று தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆற்று தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை
Published on

ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம்.

இப்படி திறந்து விடும் தண்ணீர் நாகலாபுரம், சுப்பாநாயுடு கண்டிகை, அச்சமநாயுடு கண்டிகை, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்க கடலில் கலக்கிறது.

பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இது போன்ற சூழ்நிலைகளில் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்படும்.

இதையடுத்து ஆங்கிலேயர்கள் 1937-ம் ஆண்டு ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆற்றின் மீது தரைப்பாலம் அமைத்தனர் மோரிஸ் என்ற ஆங்கிலேயர் பாலம் கட்ட பெரும் முயற்சி எடுத்து கொண்டதால் தரைப்பாலத்துக்கு மோரிஸ் தரைப்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.

சுமார் 475 அடி நீளம் உள்ள தரைப்பாலம் வழியாக திருவள்ளூர், பூந்தமல்லி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு ஆரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் தரைப்பாலத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com