வேதாரண்யத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு

வேதாரண்யம் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
வேதாரண்யத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கள்ளிமேட்டில் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியின் மூலம் நடைபெறும் அரிச்சந்திரா நதி இயக்கு அணையில் நடைபாலம் கட்டும் பணி, வேட்டைக்காரனிருப்பு முதல் தலைஞாயிறு வரை போடப்படும் சாலை பணிகள், அடப்பாறு கடைமடை இயக்கு அணை பணிகள் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது.

ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் காவிரி டெல்டாவில் உள்ள வடிநில பகுதியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் பாண்டவையாறு, வெள்ளைஆறு, அரிச்சந்திரா நதி, அடப்பாறு, வளவனாறு, வேதாரண்யம் கால்வாய் புனரமைப்பு பணிகள் மற்றும் மின் இறவை பாசன திட்ட பணிகள் ரூ.559 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

இதில் பாண்டவையாறு, வளவனாறு, வேதாரண்யம் கால்வாய் மற்றும் மின் இறவை திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய பணிகள் இதுவரை 75 சதவீதம் முடிவடைந்து உள்ளது. 98 பாசன கட்டுமானங்களை புனரமைத்தல், ஆறுகளை தலைப்பு முதல் கடைமடை பகுதிவரை தூர்வாருதல், ஆறுகளின் கரைகளை பலப்படுத்துதல், ஆறுகளின் கடைமடை பகுதியில் கடல் நீர் புகாமல் தடுத்தல், கரைகளில் தார்ச்சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 347 ஏக்கர் நிலம் பாசன மேம்பாடு பெற்றுள்ளது. மேலும் இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியிருப்பு வீடு மற்றும் பணப்பயன் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அடப்பாற்றின் குறுக்கே கள்ளிமேடு கிராமத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கடைமடை இயக்கு அணை, வண்டல் கிராமத்தில் அடப்பாற்றின் கரையில் நடைபெறும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது செயற்பொறியாளர்கள் முருகவேல், தங்கராசு, உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், கண்ணப்பன், உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், சாக்ரடீஸ் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com