வேலூர் மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் ரூ.60 கோடி வர்த்தகம் பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 15 ஆயிரம் லாரிகள் பங்கேற்றன. அதனால் ரூ.60 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் ரூ.60 கோடி வர்த்தகம் பாதிப்பு
Published on

வேலூர்,

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு முன்பை காட்டிலும் பல மடங்கு கூடுதலாக அபராதம் விதிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு திருத்தி உள்ளது. இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், டீசல், சுங்கச்சாவடி கட்டண உயர்வு மற்றும் கனரக வானங்களின் உதிரிபாகங்கள் விலை ஏற்றம் உள்ளிட்டவற்றால் லாரி உரிமையாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் மோட்டார் வாகன தொழிலை மேம்படுத்தக்கோரியும், மோட்டார் வாகன திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்தை அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அமைப்பு நடத்தியது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடந்தது.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு வழக்கம் போல் அதிகாலையில் லாரிகள் மூலம் காய்கறிகள் வந்து இறங்கின. அதே போன்று அரிசி, மளிகை கடைகளுக்கும் லாரிகள் மூலம் மளிகை பொருட்கள் கொண்டு வரப்பட்டன. பின்னர் லாரிகள் இயக்கப்படவில்லை. நகரின் பல்வேறு இடங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து வேலூர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், எங்கள் சங்கத்தில் 300 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கு 4 ஆயிரம் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் அனைத்தும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று இயக்கப்படவில்லை. அதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு சங்கங்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டன. வேலூர் மாவட்டம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. அதன் காரணமாக ரூ.60 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com