வேலூர் கோட்டை அகழியில், நவீன மிதவை எந்திரம் மூலம் தூர்வாரும் பணி தொடங்கியது

தண்ணீரில் மிதக்கக்கூடிய நவீன மிதவை எந்திரங்கள் மூலம் கோட்டை அகழியை தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.
வேலூர் கோட்டை அகழியில், நவீன மிதவை எந்திரம் மூலம் தூர்வாரும் பணி தொடங்கியது
Published on

வேலூர்,

இந்தியாவில் உள்ள 100 நகரங்கள் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் வேலூர் மாநகராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மத்திய அரசு 50 சதவீத நிதியும், மாநில அரசு பங்காக 50 சதவீத நிதியும் ஒதுக்கீடு செய்து ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

வேலூர் மாநகராட்சியில் இந்த திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் முக்கியமாக வேலூர் கோட்டையை அழகுப்படுத்தும் திட்டம் ஒன்றாகும். இந்த திட்டத்தில் முதல் கட்டமாக கோட்டை அகழியை தூர்வார முடிவு செய்யப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அகழியை தூர்வாரும் பணி தொடங்கியது.

முதலில் அகழியில் தண்ணீர் இல்லாத பகுதியான பெரியார் பூங்கா பகுதியில் தூர்வாரும் பணி தொடங்கியது. தண்ணீர் உள்ள பகுதியில் தூர்வார பொக்லைன் எந்திரத்தை தண்ணீருக்குள் கொண்டு செல்ல முடியாது என்பதால் சென்னையில் இருந்து 4 நவீன மிதவை எந்திரங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன மிதவை எந்திரங்களில் பொக்லைன் எந்திரங்களை நிறுத்தி அகழியை தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று ஒரே ஒரு எந்திரம் மட்டும் பயன்படுத்தப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) 4 நவீன மிதவை எந்திரங்களிலும் பொக்லைன் எந்திரத்தை நிறுத்தி தண்ணீர் உள்ள பகுதியில் தூர்வாரப்படும் என்று இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com