வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர்கட்சி வேட்பாளர் உள்பட 7 பேர் வேட்பு மனுதாக்கல்

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 7 பேர் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர்கட்சி வேட்பாளர் உள்பட 7 பேர் வேட்பு மனுதாக்கல்
Published on

வேலூர்,

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. வருகிற 18-ந் தேதி கடைசி நாளாகும். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து வருகிறார்கள்.

5-வது நாளான நேற்று நாம்தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி, தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரத்திடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனுதாக்கலின்போது மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசு, மாநில வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மாநில மாணவர் பாசறையை சேர்ந்த சல்மான், வேலூர் தொகுதி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதேபோன்று முற்போக்கு சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஜி.எஸ்.கணேசன் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார். மாநில தலைவர் லோகநாதன் யாதவ், மாநில துணைத்தலைவர் சுரேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இந்திய குடியரசு கட்சி சார்பில் பி.ஆறுமுகம், தேசிய மக்கள் கட்சி சார்பில் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பல்டாக்டர் திவ்யா (26), தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் சாய்நாதபுரத்தை சேர்ந்த நரேஷ்குமார் (26) ஆகியோரும் மனுதாக்கல் செய்தனர்.

வேலூரில் தாசில்தாராக பணிபுரிந்து கடந்த மே மாதம் ஓய்வுபெற்ற சேண்பாக்கத்தை சேர்ந்த செல்வராஜ் (59), சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பலராமன் (80) ஆகியோரும் நேற்று வேட்புமனுதாக்கல் செய்தனர்.

நேற்று மட்டும் 7 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர். இதன்மூலம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இதுவரை அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்பட 17 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com