

செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் காலனி தெருவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த வீடுகள் முறையாக கட்டப்படாததால் தற்போது மிகவும் சேதமடைந்து உள்ளது. அரசின் ஒப்பந்ததாரர்களால் கட்டப்பட்ட அனைத்து வீடுகளும் தற்போது சேதமடைந்து உள்ளது. சிமெண்டு, செங்கற்களை கொண்டு சுவர்கள் கட்டப்பட்டும், மேற்கூரை கான்கிரீட்டால் ஆன வீடுகள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன.
செந்துறை பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் சுதா என்பவரது வீடு லேசான மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது. அப்போது சுதாவும், அவரது மகளும் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றதால் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இது குறித்து தகவல் அறிந்த சந்திரகாசி எம்.பி. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் அந்த குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்காக தையல் எந்திரம் வழங்கினார்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் அனைத்தும் தரமற்ற நிலையில் மிகவும் சேதமடைந்து உள்ளன. ஆகையால் தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து தொகுப்பு வீடுகளை சரி செய்ய வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பெரும் உயிர் சேதம் ஏற்படும் என்று தெரிவித்தனர்.