கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 5,900 கிராம பஞ்சாயத்துகளில் பணிகள் தொடக்கம் மந்திரி ஈசுவரப்பா தகவல்

கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 5,900 கிராம பஞ்சாயத்துகளில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மந்திரி ஈசுவரப்பா கூறினார்.
கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 5,900 கிராம பஞ்சாயத்துகளில் பணிகள் தொடக்கம் மந்திரி ஈசுவரப்பா தகவல்
Published on

கலபுரகி,

கலபுரகி மாவட்டத்தில் கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மொத்தம் 6,021 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் 5,900 கிராம பஞ்சாயத்துகளில் இந்த கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் இந்த பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன. ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு கூலித்தொழிலாளிக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் நோக்கம். அந்த நோக்கம் தற்போது நிறைவேறியுள்ளது. இந்த கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தில் கர்நாடகத்திற்கு மத்திய அரசு நிலுவை தொகை ரூ.1,800 கோடியை விடுவித்துள்ளது.

இந்த திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூலி பட்டுவாடா செய்வதில் எந்த இடையூறும் இல்லை. வாரந்தோறும் அந்த தொழிலாளர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் கூலி வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் கர்நாடக அரசிடம் ரூ.1,000 கோடி நிதி இருப்பு உள்ளது. தினக்கூலி ரூ.249-ல் இருந்து ரூ.275 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

மேலும் ஒரு தொழிலாளிக்கு 150 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வேலை கேட்டு வரும் அனைவருக்கும் வேலை வழங்கப்படும். விவசாயிகள் தங்களின் நிலத்தில் பப்பாளி, வாழை போன்ற பயிர்களை பயிரிட இந்த திட்டத்தில் உதவி வழங்கப்படும். இந்த திட்டத்தில் மாநிலத்திலேயே பல்லாரியில் அதிகபட்சமாக 1.30 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் 1.10 லட்சம் தொழிலாளர்களுடன் கலபுரகி 2-வது இடத்தில் உள்ளது. ஏழை மக்களுக்கு வேலை வழங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

ஏரிகளை தூர் வாருவது, விவசாய குளங்கள் அமைப்பது, தடுப்பணைகளை கட்டுவது போன்ற பணிகள் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வாழும் கலை அமைப்புடன் அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நிலத்தடி நீர் சேதனா என்று பெயர் சூட்டியுள்ளோம். இவ்வாறு மந்திரி ஈசுவரப்பா கூறினார்.

இந்த ஆய்வின் போது உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஈசுவரப்பா அங்கு சாலையோரத்தில் மரக்கன்றை நட்டு தண்ணீர் ஊற்றினார். இந்த நிகழ்ச்சியில் உமேஷ் ஜாதவ் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com