

சென்னை,
திருமண நிகழ்ச்சிகளில் மண்டபத்தில் 50 சதவீதம் பேர் பங்கேற்க அனுமதிக்ககோரி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநில தலைவர் எம்.ஜி.ராஜாமணி தலைமை தாங்கினார்.
மாநில பொது செயலாளர் இட்லி இனியவன், மாநில செயலாளர் கலைமாமணி சி.வி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திருமண மண்டபத்தில் 50 சதவீதம் பேரை அனுமதிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பட்டக்காரர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஊரடங்கின்போது அதிக அளவு பாதிக்கப்பட்டது சமையல் துறையினரே. திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு பல லட்சம் சமையல் தொழிலாளர்கள் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் சுப நிகழ்ச்சிகள் ரத்தாவதால் அவர்கள் அனைவரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே அரசு 100 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்பதை மாற்றி ஆயிரம் பேர் அமரக்கூடிய திருமண மண்டபத்தில் 50 சதவீதம் பேர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்க வேண்டும். எங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.