

திருவையாறு,
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஸ்ரீராம் நகரில் ராஜகணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் திருப்பணிகளுக்கான பாலாலய பூஜைகள் நடைபெற்றன.
இதனால் கோவிலின் கோபுர கலசம் மற்றும் ஐம்பொன்னால் ஆன உற்சவர் விநாயகர் சிலை ஆகியவை சன்னதிக்குள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவில் அர்ச்சகர் மற்றும் நிர்வாகிகள் கோவிலை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவில் சன்னதி கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்தனர். இதையடுத்து கோவில் அர்ச்சகர் கோவிலுக்கு வந்து பார்த்தபோது ஐம்பொன் விநாயகர் சிலை மற்றும் கோபுர கலசத்தை காணவில்லை.
மர்ம நபர்கள் கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்து சிலையையும், கலசத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிலை மற்றும் கலசத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் உண்டியலையும் உடைக்க முயற்சி செய்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தடய வியல் நிபுணர்களை வரவழைத்து துப்பு துலக்கும் பணி நடைபெற்றது. கொள்ளையடிக்கப்பட்ட விநாயகர் சிலை 3 அடி உயரம், 2 அடி அகலம் கொண்டதாகும். சிலை மற்றும் கலசத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.