திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் 204 பஸ்கள் இயக்கம் வழிபாட்டு தலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க ஏற்பாடு

உரடங்கில் மேலும் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் 204 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் வழிபாட்டு தலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் 204 பஸ்கள் இயக்கம் வழிபாட்டு தலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க ஏற்பாடு
Published on

திருவாரூர்,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் திருவாரூர் உள்பட 11 மாவட்டங்களில் நோய் தொற்றின் தீவிரத்தின் காரணமாக அதிக தளர்வுகள் இல்லாத நிலையில் மளிகை, காய்கறி உள்பட குறிப்பிட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் ஜவுளி, நகைக்கடைகள், வழிபாட்டு தலங்கள், விளையாட்டு அரங்கங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பாதிப்பு முழுமையாக விலகாததால் 8-வது முறையாக வருகிற 12-ந் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.. இதில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 50 சதவீதம் பயணிகளுடன் பஸ் போக்குவரத்து தொடங்கிடவும், வழிபாட்டு தலங்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் வழிபடுவதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகள் இரவு 8 மணி வரை செயல்படவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 பணிமனைகள் உள்ளன. இதில் திருவாரூரில் இருந்து 61 பஸ்களும், நன்னிலத்தில் இருந்து 29 பஸ்களும், மன்னார்குடியில் இருந்து 63 பஸ்களும், திருத்துறைப்பூண்டியில் இருந்து 51 பஸ்களும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 204 பஸ்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.

இதையொட்டி திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களை கழுவி தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் முககவசம் அணிந்து பணி மேற்கொள்ளவும், பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிவதுடன், கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினிகள் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் முக கவசம் அணிந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். பஸ்களில் 50 சதவீதம் பயணிகள் என்பதன் அடிப்படையில் 30 இருந்து 35 பயணிகள் பயனம் செய்ய அனுமதிக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் வழிபாட்டு தல பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தீயணைப்பு விரர்கள் உதவியுடன் கோவில் வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் வழிபாட்டு தலங்களில் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் தூய்மைப் பணி நடந்தது. மேலும், பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக கயிறு கட்டுதல், வட்டம் வரைதல் ஆகிய பணிகள் செய்யப்பட்டது. இதேபோல வடுவூர் வடபாதியில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தூய்மை பணி நடந்தது.

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் தூய்மை பணி மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்செயல் அலுவலர் சங்கீதா கூறியதாவது:- மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் நடை நாளை (இன்று) திறக்கப்படுகிறது.பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.பக்தர்கள் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..கோவில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.உரிய சுகாதரா பாதுகாப்பு முறைகள் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com