திட்டக்குடியில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை - கலெக்டர் ஆய்வு

திட்டக்குடியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார்.
திட்டக்குடியில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை - கலெக்டர் ஆய்வு
Published on

திட்டக்குடி,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் திட்டக்குடி பகுதியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தவற்காக மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் சென்றார். தொடர்ந்து அவர் திட்டக்குடி அண்ணா பஸ் நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் சமூக இடைவெளிவிட்டு காய்கறிகளை வாங்கிச்செல்ல வேண்டும் எனவும், வெளியில் அதிகம் சுற்ற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் வியாபாரிகளிடம் தினசரி காய்கறிகள் வருகிறதா? என கேட்ட அவர், நியாயமான விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தங்கள் இடத்திற்கே வந்து சேரும் அளவிற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

மேலும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசங்கள் அனைவரும் கண்டிப்பாக அணிய வேண்டும். பொதுமக்கள் அத்தியாவசிய தேவை மற்றும் மருத்துவ தகவல்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மருத்துவ கட்டுப்பாட்டு அறை 1077 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை நிலையம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பெரியசாமி முதலியார் செல்லம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் கொரோனா நிவாரண நிதியை திட்டக்குடி தொழிலதிபர் பி.டி.ராஜன் காசோலையாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். மேலும் கல்வி விழிப்புணர்வு பேரவை மற்றும் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு அரிசி, கோதுமை, காய்கறிகள், முக கவசம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார். அப்போது திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல், சமூக நல தாசில்தார் ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பு செயலாளர் வீரமணி, ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com