தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் வீடுகளில் வைத்து வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை கோவில் அருகே வைக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான சரவணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கட்டுப்பாடுகள்

கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்த்தல், போன்ற தேவையான கட்டுப்பாடுகளை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் வருகிற 15-ந் தேதி வரை சமய விழாக்களின் கொண்டாட்டத்துக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. ஆகையால் பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்.

தனிநபருக்கு அனுமதி

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடை செய்யப்படுகிறது. தனி நபர்கள், தங்களது வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கோவில்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

அறநிலையத்துறையினர் மூலம்...

இந்த சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த வழிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விழாவுக்கான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தவறாது முககவசம் அணிவதோடு, பொருட்கள் வாங்க நிற்கும்போதும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள் மற்றும் போலீசார், இந்து முன்னணி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com