தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 12ந் தேதி 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மெகா சிறப்பு முகாம் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மெகா சிறப்பு முகாம் நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகிறது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பல வழிகளில் ஊக்குவித்து வருகிறோம். அந்த வகையில் இன்னொரு மெகா தடுப்பூசிமுகாம் நடத்தப்பட உள்ளது. தமிழக அரசு வருகிற 12-ந் தேதி தமிழகம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை நடத்த உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டால்தான் 3-வது அலையோ, வேறு இக்கட்டான சூழல் வராமலோ பாதுகாக்க முடியும். அதன்படி இந்த மெகா தடுப்பூசி முகாம் வருகிற 12-ந் தேதி காலை முதல் மாலை வரை நடத்தப்படுகிறது.

தடுப்பூசி

தூத்துக்குடி மாவட்டத்தில் 18 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் 14 லட்சத்து 58 ஆயிரத்து 230 பேர் ஆவர். இதில் முதல் தவணை தடுப்பூசியை 5 லட்சத்து 46 ஆயிரத்து 61 ரே செலுத்தி உள்ளனர். 37 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். குறைந்தபட்சம் நாம் 80 சதவீதம் வரை தடுப்பூசி செலுத்த வேண்டும். இதற்கு மொத்தம் சுமார் 11 லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்த வேண்டும். அதே போன்று 2-வது தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர். மற்ற மாவட்டங்களை விட தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறைவாக உள்ளனர். மாவட்டத்தில் தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் கையிருப்பு உள்ளது. மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் பொதுமக்கள் அதிக அளவில் தடுப்பூசி போட ஆர்வம் இல்லாமல் உள்ளனர்.

1 லட்சம் பேர்

இதனால் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கு 605 குழு அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவில் 100 பயிற்சி டாக்டர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த குழுவினர் 403 பஞ்சாயத்து, ஒரு மாநகராட்சி, 2 நகராட்சி, 19 பேரூராட்சிகளில் நடத்தப்படும் முகாம்களில் பணியாற்ற உள்ளனர். இதுதவிர 50 நடமாடும் மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மாற்றுத்திறனாளிகள், வீடுகளில் இருந்து வெளியில் வர முடியாத முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளனர்.

தற்போது 3 விதமாக பிரித்து தடுப்பூசி போடப்படுகிறது. முதலில் அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் 80 சதவீதம் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மீதம் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும். சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும். 2-வதாக பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 3-வதாக 2-வது தவணை தடுப்பூசி போட தகுதி உள்ள அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சமுதாயம் சார்ந்த அமைப்புகள், தெழிலாளர் சங்கங்கள், பஞ்சாயத்து தலைவர்களை அழைத்து பேசி தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக பல வீடியோக்கள் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் கிராமங்களில் ஆட்டோக்கள் மூலமும், துண்டு பிரசுரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

அபராதம்

மாவட்டத்தில் திருமண விழாக்களில் பலர் முககவசம் அணியாமல் உள்ளனர். பொதுமக்கள் திருமண விழாக்களில் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். புகைப்படம் எடுப்பதற்காக முககவசத்தை கழற்ற வேண்டாம். இதனை கண்காணிக்க 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் திருமண மண்டபங்களில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். திருமண மண்டப உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதியில்லை

மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எந்தவித ஊர்வலத்துக்கும் அனுமதி கிடையாது. தனிநபர்கள் மட்டும் வீட்டில் வைத்து விநாயகர் சிலைகளை வழிபடலாம். ஆனால் எந்தவித கூட்டமும் இன்றி பொதுமக்கள் வழிபாடு செய்து கொள்ளலாம். எந்த ஊர்வலத்துக்கும், கூட்டம் கூடுவதற்கும் அனுமதி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com