திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 5 பேர் பலி சாவு எண்ணிக்கை 20 ஆக உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். தற்போது சாவு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 5 பேர் பலி சாவு எண்ணிக்கை 20 ஆக உயர்வு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் முதலில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன்பின்னர் அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பூரண குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். அதன்பிறகு கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. தொடர்ந்து கொரோனா தொற்று இல்லாததால் பச்சை மண்டலமாகவும் மாறியது.

இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து வந்தவர்களின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. தினமும் இரட்டை இலக்க எண்களில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டு இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் கொரோனா பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்படுகிறவர்கள் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறவர்கள் பலியாகியும் வருகிறார்கள். ஏற்கனவே மாவட்டத்தில் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர்.

அது பற்றிய விவரம் வருமாறு:-

5 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மஜித்தெருவை சேர்ந்த 55 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி பலியானார். இதுபோல் திருப்பூர் பிக்பஜார்தெருவை சேர்ந்த 67 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார்.

மேலும், சாமுண்டிபுரத்தை சேர்ந்த 51 வயது ஆண், திருப்பூர் வேலன்நகரை சேர்ந்த 67 வயது ஆண் மற்றும் திருமூர்த்திநகரை சேர்ந்த 45 வயதுபெண் ஆகியோரும் கொரோனா பாதித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களும் சிகிச்சை பலன் இன்றி நேற்று பலியாகினர். நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 5 பேர் பலியான சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

16 ஆக உயர்வு

நேற்று முன்தினமும் ஒரே நாளில் 3 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. நேற்று 5 பேர் பலியானதை தொடர்ந்து மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதில் 16 ஆண்கள், 4 பெண்கள் ஆவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com