திருப்பூரில், திருமணமான ஒரு மாதத்தில் கோர்ட்டு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூரில் திருமணமான ஒரு மாதத்தில் கோர்ட்டு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. இது பற்றிய விவரம் வருமாறு:-
திருப்பூரில், திருமணமான ஒரு மாதத்தில் கோர்ட்டு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

அனுப்பர்பாளையம்,

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 32). இவர் கடந்த ஒரு ஆண்டாக திருப்பூர் ஜே.எம்.3 கோர்ட்டில் தட்டச்சராக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயா (25) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு கார்த்திக் மனைவியுடன் திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த ராஜாநகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் விஜயா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி தனது மகன் கார்த்திக்கிடம் பேசுவதற்காக அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் பலமுறை செல்போன் ஒலித்தும் கார்த்திக் எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன சுப்பிரமணி அருகில் உள்ள உறவினரை அழைத்து, கார்த்திக் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார். இதையடுத்து கார்த்திக் வீட்டிற்கு உறவினர் ஒருவர் சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த உறவினர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார். அப்போது அங்கு கார்த்திக் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் கார்த்திக் உடலை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள்.

அத்துடன் அவருடைய வீட்டில் ஒரு நோட்டுக்குள் கார்த்திக் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அதில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு வாழ விருப்பம் இல்லை, வாழ தகுதி இல்லை என்றும் எழுதப்பட்டு இருந்தது.

மேலும் எனது அப்பா, அம்மா, மனைவி, மாமனார், மாமியார் அனைவரும் மிகவும் நல்லவர்கள். என்னை வாழ விடாமல் தற்கொலை எண்ணம் என்னை தூண்டிக்கொண்டே இருந்ததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் கார்த்திக் எழுதி வைத்துள்ளார்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் அவர் வேலை செய்யும் இடத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் திருமணமான 1 மாதத்தில்கோர்ட்டு ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com