திருப்பூரில் பிளஸ்-2 மாணவியை கத்தியால் குத்திய காதலன் கைது

திருப்பூரில் பிளஸ்-2 மாணவியை கத்தியால் குத்திய காதலன் கைது செய்யப்பட்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
திருப்பூரில் பிளஸ்-2 மாணவியை கத்தியால் குத்திய காதலன் கைது
Published on

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்த பெல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 19). இவர் திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த அம்மன்நகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் செல்போனில் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மணிக்கு கஞ்சா பழக்கம் இருப்பது காதலியான அந்த மாணவிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் மணியிடம் பேசுவதை படிப்படியாக குறைத்து கொண்ட மாணவி, ஒருகட்டத்தில் மணியிடம் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்திக்குள்ளான மணி விடாப்பிடியாக அந்த மாணவியை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். பின்னர் என்னிடம் பேசவில்லையென்றால் நான் செத்து விடுவேன் என்றும் கூறி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி மாணவியிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறிய மணி, மோட்டார்சைக்கிளில் அந்த மாணவியை வஞ்சிப்பாளையம் ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துசென்றுள்ளார். அப்போது அந்த மாணவி மணியிடம், உனக்கு கஞ்சா பழக்கம் இருப்பதால் உன்னை பிடிக்கவில்லை என்றும் காதலை கைவிடுமாறும் கூறி உள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் உடலில் பல இடங்களில் பயங்கரமாக குத்தியது மட்டுமின்றி, மாணவி மீது கல்லை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இதில் படுகாயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். மறுநாள் காலை ரத்தக் காயங்களுடன் வந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவியிடம் விசாரணை நடத்திய திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து மணியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் அம்மன்நகரில் மணி பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற திருமுருகன்பூண்டி போலீசார் மணியை கைது செய்தனர். பின்னர் திருப்பூர் ஜே.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com