திருப்பூரில் வாலிபரை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை - திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு

திருப்பூரில் வாலிபரை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து, திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூரில் வாலிபரை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை - திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு
Published on

திருப்பூர்,

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு முதல் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் சுப்பாராவ். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 24). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 9-5-2005 அன்று கோவையில் இருந்து வேலையை முடித்துக்கொண்டு, ராமச்சந்திரன் ரெயில்வே கேட் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென வழிமறித்தனர். தொடர்ந்து கத்தியால் ராமச்சந்திரனை அவர்கள் குத்தி, அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் ராமச்சந்திரன் பலியானார். இந்த கொலை சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கருமாரம்பாளையத்தை சேர்ந்த சரவணன் (21), கார்த்தி (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருப்பூர் முதன்மை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி அல்லி நேற்று தீர்ப்பளித்தார். அப்போது ராமச்சந்திரனை கொலை செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட சரவணன் மற்றும் கார்த்தி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும்,, வழிப்பறி செய்ததற்காக தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.500 அபராதம் விதித்தும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com